England vs WI -இங்கிலாந்தின் வாழ்வா/சாவா போராட்டம்!
இதுவரை நடந்த ஆட்டங்களில், நான் மிகவும் ரசித்த ஆட்டமிது. சேப்பாக்கம் பொதுவாகவே டென்ஷன் ஏற்றும் ஆட்டங்களை கண்டு வந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே! இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து தோற்றிருந்தால், பெட்டி படுக்கையை கட்டிக் கொண்டு ஊருக்குக் கிளம்ப வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியிருக்கும். பின்புற வாசல் வழியாக, இந்தியாவும் பங்களாதேஷும் கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும்.
இங்கிலாந்து தோல்வியை நோக்கி வேகமாக தள்ளப்பட்ட நிலையிலும், சோர்வடையாமல் நம்பிக்கையுடன் போராடி வெற்றி பெற்றது. எனக்குப் பிடித்த அணி வென்றதில் மிக்க மகிழ்ச்சி! அடுத்து வரும் 2 ஆட்டங்களில் (இந்தியா-வெ.இ, தெ.ஆ-பங்களாதேஷ்), இந்தியா, தெ.ஆ என்று இருவரும் மண்ணைக் கவ்வினாலொழிய, இங்கிலாந்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்று விடும்!
முதலில் பேட் செய்த இங்கிலாந்து 48/1, 9 ஓவர்களில். அடுத்து வந்த ஜோனாதன் டிராட், பவுண்டரிகளாக ரன்களை குவித்தார். அதிரடி ஆட்டமெல்லாம் இல்லை, அருமையான placement & timing! சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷூ, இது அவரது முதல் ஆட்டம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அபாரமாக பந்து வீசினார். டிராட் விக்கெட்டையும் கைப்பற்றினார். ஸ்கோர் 121/3 (22 ஓவர்கள்). பிஷூ 4-0-13-1.
போலார்டும் பிஷூவும், இங்கிலாந்தின் ரன் குவிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பெல், மார்கன், போபாரா என்று அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததில், 134/3 என்பதிலிருந்து 152/6 (33 ஓவர்களில்). இதுவே, இந்தியாவாக இருந்திருந்தால், 200 ரன்களில் சுருண்டிருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்! இங்கிலாந்து 243 ரன்கள் எடுத்து 48.4 ஓவர்களில் ஆட்டமிழந்தது. பிஷு 10-0-34-3
பேட்டிங்குக்கு களமிறங்கியது வெ.இ. துவக்க ஆட்டக்காரர் கெய்லுக்கு, 3வது ஓவரில் வெறி பிடித்தது :) அவர் விளாசிய விளாசலில், ஸ்கோர் 53/0 (6 ஓவர்கள்). இந்தச் சூழலிலும், ஸ்வான் பந்து வீச்சு சிறப்பு, 3-0-10-0. டிரெட்வெல் பந்து வீச்சில் கெய்ல் வீழ்ந்தார். இங்கிலாந்துக்கு மூச்சு வந்தது :) ஆனாலும், டேரன் சாமி, கெய்ல் இல்லாத குறையை போக்கும் விதமாக பேட்டிங் செய்ததில், 15 ஓவர்களில் ஸ்கோர் 106/3, RR: 7.06, RRR: 3.94, இங்கிலாந்துக்கு ஆப்பு உறுதி போலத் தெரிந்தது! விழுந்த 3 விக்கெட்டுகளும் சுழற்பந்து வீச்சாளர் டிரெட்வெல்லுக்குத் தான், 5-1-32-3
இங்கிலாந்தின் பந்து வீச்சு மீண்டும் பரிமளிக்க ஆரம்பித்ததில், அடுத்த 15 ஓவர்களில் வெ.இ எடுத்த ரன்கள் 48 மட்டுமே, அதிரடி மன்னன் போலார்ட் ஆடியும்! 3 விக்கெட்டுகள் காலி, ஸ்கோர் 154/6. ஆஹா, இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்புள்ளது போலத் தெரிகிறதே என்று நினைத்தால், ரஸ்ஸல் (சர்வானுடன் ஜோடி சேர்ந்து) இங்கிலாந்து பந்து வீச்சை அனாயசமாக கையாண்டதில் ஸ்கோர் 40 ஓவர்களில் ஸ்கோர் 217/6. தேவையான ரன்ரேட் 2.7 மட்டுமே! ரஸ்ஸல் 49* (40 பந்துகளில்). இளங்காளை பயமறியாது என்பதற்கு ரஸ்ஸல் சரியான எ.கா.
எனக்கு ச.கா (சம்ம காண்டு) :) வெ.இ க்கு ரெவ்யூ பாக்கி இல்லாத நிலையில், தனது கடைசி ஓவரில், டிரெட்வெல், ரஸ்ஸலை வீட்டுக்கு அனுப்பினார். 44வது ஓவரில், ஸ்வான், சர்வான், ரோச் என்று 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதில், இங்கிலாந்து வெற்றிக்கு அருகில் வந்து, அடுத்த ஓவரில் வெற்றியைத் தொட்டது. வெ.இ 225 ரன்களில் ஆட்டமிழந்தது! இங்கிலாந்து போன்ற ஒரு நல்ல அணி அடுத்த சுற்றுக்குத் தேர்வு பெறும் நிலையில் இன்னும் நீடிப்பது குறித்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் (ஸ்வான், டிரெட்வெல்) இருவரும் மொத்தம் 20 ஓவர்கள் வீசி, 84 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றியது குறிப்பிடவேண்டியது!
இறுதியாக, Dont worry, Be Happy சமாச்சாரத்திற்கு வருவோம்! சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தில், இந்தியா மகா மோசமாக தோற்றாலொழிய, இந்தியா கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி தான்! இருந்தாலும், நமது கிரிக்கெட்பாரம்பரிய வழக்கப்படி, தென்னாபிரிக்கா பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்தல் நலம் பயக்கும் ;-) ஏனெனில், இந்தியா வெஸ்ட் இண்டீஸை வெல்ல வேண்டுமே என்ற ரென்ஷனான எதிர்பார்ப்பை விட தெ.ஆ தனது ஆட்டத்தில் வெல்லும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்காத ஒன்று!!!
என்றென்றும் அன்புடன்
பாலா
2 மறுமொழிகள்:
Test !
sir, you forgot to mention the superb catch by Trott @ the boundary line though it was given not out.
Post a Comment